கண்ணனும் பொன்னனும்
ஒரு நாள் இருவரும் காட்டுக்குப் போனார்கள். காட்டிலுள்ள மிருகங்கள், பறவைகள் என்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே சந்தோசமாகச் சென்றார்கள். அப்பொழுது, எதிரே ஒரு கரடி திடீரென வந்தது. கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. ஓடி ஓடி ஒரு மரத்தருகே வந்ததும், கண்ணன் உடனடியாக மரத்தில் ஏறி விட்டான்.
பொன்னனுக்கு மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் கண்ணன் நடந்து கொண்டான். பொன்னன் கவலையுடன் எப்படிக் கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, நிலத்தில் வீழ்ந்து படுத்துக் கொண்டான்.
அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்தது. உண்ணு முன் அவன் இறந்து விட்டானா இல்லையா என்று பார்க்க அவனை மோந்து பார்த்தது. பொன்னன் மூச்சை அடக்கிக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டு உண்மையிலேயே இறந்தவன் போல் இருந்ததால், அவன் இறந்து விட்டான் என்றே கரடி நினைத்தது. இறந்தவனை உண்பது தன் வீரத்திற்கு அழகல்ல என்று இறுமாப்புடன் சொல்லிக் கொண்டு கரடி போய் விட்டது.
கரடி போவதை மரத்திலிருந்து பார்த்த கண்ணன், கீழே இறங்கி வந்து பொன்னனை எழுப்பினான். கரடி போய் விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம் என்று கண்ணன் சொன்னான். பொன்னனும் எழும்பி தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான். கரடி பொன்னனை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த கண்ணன், கரடி பொன்னனிடம் ஏதோ சொல்கிறது என்று பிழையாக விளங்கிக் கொண்டிருந்தான். அதைப் பொன்னனிடம், "கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?" என்று கேட்டான். அதற்குப் பொன்னன், "உன்னைப் போல் ஆபத்தில் உதவாத சுயநல நண்பர்களுடன் இனி மேல் சேராதே என்று சொன்னது" என்றான். இப்பதிலால், கண்ணன் தன் சுயநலப் புத்தியை நொந்து கொண்டான். பொன்னனோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு தனியே நடந்தான்.