Insert Logo Here

Search only in Ottawa Tamil School

இலக்கியத் தேடல்

ஆண்டு விழா காணொளிகள்

புதிய தகவல்கள்
Latest News


Tamil School App தமிழ்ப்பள்ளிச் செயலி

கோடைவகுப்பு 2024 Summer class   July 2 - 26    நேரடியாகவும், இணைய வழியாகவும் @ பார்கவன் & கனாட்டா
In person and online, in Barrhaven & Kanata
Info/registration பதிவு செய்க


தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்

தைப் பொங்கல் - பொங்கல்

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

இது இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா, காவிரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் 28 நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது. முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.

சங்க இலக்கியங்களில் தைப் பொங்கல்

”தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
”தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
”தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
”தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

சித்திரை வருடப் பிறப்பு - பொங்கல், கஞ்சி

தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகக் கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏனென்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.

இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ், சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.

ஐக்கியம், சமய, சமூக, கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப்படும் சமுக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு, தான, தர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம்.

சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிடலாம். அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகள் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.

மருத்து நீர்

இந்த புண்ணிய காலத்தில் சகலரும் மருத்து நீர் தேய்த்து தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து நீராட வேண்டும். மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்படும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

ஆடிப் பிறப்பு - கூழ், கொழுக்கட்டை

ஆடிப்பிறப்பு தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம்.

தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாகும்.

இந்த ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் இப்படிப் பாடுகின்றார்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே

கார்த்திகை விளக்கீடு - நெற்பொரி

கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ''வேலின் நோக்கிய விளக்க நிலையும்'' என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள். பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். பழைய காலங்களில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு, களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ஆகவே, மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகிறது. Thanks: ourjaffna.com, panippulam.com and wikipidia